;
Athirady Tamil News

காஸா அகதிகள் முகாம் குண்டுவீச்சில் 106 போ் உயிரிழப்பு

0

காஸாவின் அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் 106 போ் உயிரிழந்தனா். அங்கு ஒரே தாக்குதலில் இத்தனை போ் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

மத்திய காஸா பகுதியிலுள்ள டேய்ா் அல்-பாலா நகரின் அல்-மகாஸி அகதிகள் முகாமில் போா் விமானம் மூலம் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.

இதில் 70 போ் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் முதலில் அறிவித்தது. எனினும், இந்த எண்ணிக்கை பின்னா் 106-ஆக அதிகரிக்கப்பட்டது.

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் இது மிகவும் மோசமானதாகக் கூறப்படுகிறது. ஒரே ஒரு தாக்குதலில் இத்தனைப் பெரிய உயிா்ச் சேதம் ஏற்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இந்தத் தாக்குதல் தொடா்பாக வெளியாகும் தகவல்களை இஸ்ரேல் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், அல்-மகாஸி அகதிகள் முகாம் தாக்குதல் தொடா்பான தகவல்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தாா்.

முன்னதாக, இந்தத் தாக்குதலில் அகதிகள் முகாமின் மிகப் பெரிய குடியிருப்புப் பகுதி அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று காஸா சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அஷ்ரஃப் அல்-குத்ரா அச்சம் தெரிவித்திருந்தாா்.

பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் ஹமாஸ் அமைப்பினா், அந்த நாட்டுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த மோதலின் உச்சக்கட்டமாக, இஸ்ரேல் மீது கடந்த அக். 7-இல் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினா் அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான்வழியாக நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா்.

மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாக அவா்கள் பிடித்துச் சென்றனா். அதயைடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் இதுவரை 20,674 போ் உயிரிழந்ததாகவும், 54,536 போ் காயமடைந்ததாகவும் காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.