பெத்லஹேமில் மணியோசைக்கு பதில் குண்டு சத்தம் தான் கேட்கிறது: கிறிஸ்துமஸ் நாளில் வேதனை
பெத்லஹேம் நகரத்தில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று மணியோசைக்கு பதில் குண்டு சத்தம் தான் கேட்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெத்லஹேம் (Bethlehem)
இயேசு கிறிஸ்து பிறந்ததாக கிறிஸ்துவர்களால் நம்பப்படும் பெத்லஹேம் நகரம் ஜெருசலேமின் தெற்கில் அமைந்துள்ளது. இங்கு உள்ள ‘Church of the Nativity’ தேவாலயத்தை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள், சுற்றுலாப் பயணிகள் வருவர். முக்கியமாக, கிறிஸ்துமஸ் நாளில் பெத்லஹேம் நகரமே விழாக்கோலம் போல காட்சியளிக்கும்.
இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி முதல் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழு இடையே போர் நடைபெற்று வருவதால், பெத்லஹேமிற்கு வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் யாரும் வரவில்லை என அங்குள்ள வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
மணியோசைக்கு பதில் குண்டு சத்தம்
இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பெத்லஹேம் பகுதியைச் சேர்ந்தவர் பேசுகையில், “இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போர் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நிறுத்தப்பட வேண்டும். இதனை வெளி உலகத்திற்கு காண்பிக்கும் நோக்கத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்திப்பது என முடிவு செய்துள்ளோம்” என்றார்.
மேலும், பரிசு பொருட்களை விற்கும் ரோனி தபாஷ் என்பவர், “யாரும் வரமாட்டார்கள் என தெரிந்தும் கடைகளை திறந்து வைத்துள்ளன். கடந்த 2 மாதங்களாக யாரும் வருவதில்லை” என்றார்.
அதோடு காஸாவில் உள்ள கத்தோலிக்க ஹோலி சர்ச்சில் உள்ள நபீலாஷாலா, “இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடவில்லை. ஆலய மணியோசைக்கு பதில் குண்டு சத்தம் தான் கேட்கிறது. இப்படி இருக்கையில் எவ்வாறு கிறிஸ்துமஸ் கொண்டாட முடியும்” என்றார்.