இரணைமடு குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றம்: பாதிப்படைந்துள்ள விவசாயிகள் விசனம்
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றத்தின் காரணமாக சுமார் எண்ணாயிரம் ஏக்கர் வரையான நெற்பயிர்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் அழிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வெரு விவசாயிகளும் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 300 ரூபாய் வரைவான இழப்பினை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூலம் மேலதிக நீர் திறந்து விடப்பட்டு அதிக அளவான நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கி பாதிப்பு
இதன் காரணமாக இரணைமடுக் குளத்தின் கீழ் உள்ள தாழ்நில பகுதிகளான பண்ணங்கண்டி முரசுமோட்டை ஐய்யன் கோவிலடி பழைய வட்ட கட்சி கண்டாவளை போன்ற பகுதிகள் ஒரு வார காலத்துக்கு மேலாக வெள்ளத்தில் மூழ்கிக் காணப்பட்டன.
இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வாண்டுக்குரிய காலப்போக நெற் செய்கையில் சுமார் எண்ணாயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நெல் வயல்கள் நீரில் மூழ்கியதால் பகுதியளவிலும் முழுமையாகவும் அழிவடைந்துள்ளன.
குறித்த பகுதிகளில் காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள ஒவ்வொரு விவசாயிகளும் ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் மேற்பட்ட நட்டத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
முழுமையான இழப்பீடு
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக வங்கிகளில் கடன்களை பெற்றுக் கொண்டும் தங்களது நகைகளை அடகு வைத்தும் உரம் மற்றும்களை நாசினிகளை கடன்களாகப் பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இவ்வாறான நட்டத்தை எதிர்கொண்டிருப்பது என்பது அவர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது இதற்கான இழப்பீடுகள் கிடைக்கப்பெற்றாலும் அது ஒரு முழுமையான இழப்பீடாகவோ அல்லது அரைவாசி செலவாகவோ கிடைக்கப்பெறும் என்பது கேள்விக்குறியாகும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்து 2018 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற அளவிலே ஒரு அழிவினை விவசாயிகள் எதிர்கொண்டிருந்தனர்.
வட மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படும் இரணைமடுக்குளம் கடந்த 2017 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டாலும் அதன் முழுமையான பலாபலன்களையோ அல்லது சிறியளவு பலாபலன்களையோ அனுபவிக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளார்.
சரியான பொறிமுறைகள் இன்றி குளத்தில் நீரை தேக்கி வைத்து பொறுப்பற்ற விதத்தில் அதிக அளவில் திறந்து விடுவது என்பது அதிகாரிகள்னது பொறுப்பற்ற செயல் என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.