பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்து பெண்
பாகிஸ்தான் நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சவீரா பிரகாஷ் என்ற இந்து பெண் ஒருவர் முதல்முறையாக தேர்தலில் பொதுத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் 16 ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் 2024 பெப்ரவரி 8ஆம் திகதி நடைப்பெறவுள்ளது.
அந்த வகையில், பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனூடாக பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப்பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ் பெற்றுள்ளார்.
அதேவேளை கடந்த 2022ம் ஆண்டு அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற சவீரா, தனது படிப்பை முடித்தவுடன் அரசியல் களத்தில் நுழைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்.
அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க விரும்புகிறேன். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஒழிப்பதே முதல் முன்னுரிமை.
எனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அரசியல் பணிகளை மேற்கொள்ள விரும்புகிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.