700 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை.., ஆறரை கிலோவாக கூட்டி மருத்துவர்கள் சாதனை
குறை பிரசவத்தில் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை ஓராண்டில் ஆறரை கிலோ எடையாக அரசு மருத்துவர்கள் கூட்டியுள்ளனர்.
700 கிராம் எடையில் குழந்தை
மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் புதுராஜா மற்றும் மினிப்ரியா. இவர்களுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 2 -வதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குறை பிரசவத்தில் பிறந்த இந்த குழந்தை 700 கிராம் எடையுடன் இருந்தது.
இதன் பின்னர், குழந்தைகள் நல மருத்துவர்களான ராதாமணி, செந்தில்நேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குழந்தையை 66 நாட்கள் தீவிரமாக கண்காணித்தனர்.
ஆறரை கிலோவுக்கு கூடிய குழந்தை
இதன்பின்னர், குழந்தையின் எடை 1,400 கிராமாக கூடியதால் பெற்றோருடன் குழந்தையை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மூளை வளர்ச்சி, கண் பார்வை, கை, கால்கள் வளர்ச்சி, உடல் எடை ஆகியவற்றை ஓராண்டாக மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.
இதன் காரணமாக இந்த பெண் குழந்தைஆறரை கிலோவுக்கு கூடி எந்தவொரு குறைபாடும் இல்லாத குழந்தையாக மாறியது. தற்போது, குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது. இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.