அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்: வெளியான சுற்றறிக்கை
கடந்த காலங்களில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் விசேட விடுமுறைகள் விடுப்புப் பதிவேட்டில் முறையாகப் பதியப்பட வேண்டும் எனவும் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட விடுமுறை
இந்த விசேட விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கு கடமைக்கு சமூகமளிக்க முடியாததற்கான காரணத்தைக் குறிப்பிட்டு கடிதமொன்றினை பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலரின் கையொப்பத்துடன் திணைக்கள தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், திணைக்கள தலைவர் கடிதத்தினை சரிபார்த்து, அவற்றினை விசாரித்த பின்னரே இந்த விசேட விடுமுறை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.