;
Athirady Tamil News

சிறைச்சாலைகளாக மாறும் அரசாங்க கட்டடங்கள்

0

நாடு தழுவிய ரீதியில் தற்போது கைதுசெய்யப்படும் போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தடுத்து வைக்க அரசாங்க கட்டடங்களை பயன்படுத்தப் போவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் உத்தரவிற்கு அமைய நாடு தழுவிய ரீதியில் யுக்திய என்னும் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த தேடுதல்களில் கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.

இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேகநபர்களை பயன்படுத்தப்படாத அரசாங்க கட்டடங்களில் தடுத்து வைக்க தீர்மானித்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சிறைச்சாலை அமைப்பதற்கு திட்டம்
யுக்திய நடவடிக்கையினால் நாடு முழுவதிலும் காணப்படும் 28 சிறைச்சாலைகளிலும் சுமார் 2500 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் சிறைச்சாலைகளில் 11000 கைதிகளை தடுத்து வைக்க முடியும் என்ற போதிலும், யுக்திய தேடுதல் வேட்டைக்கு முன்னதாகவே 20000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த தேடுதல் வேட்டையின் பின்னர் மேலும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் நிலவி வரும் நெரிசலைக் கருத்திற் கொண்டு புதிய சிறைச்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய பொருளாதார நிலைமைகளினால் கைதிகள் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்படாத அரசாங்க கட்டடங்களை கைதிகளை தடுத்து வைக்க பயன்படுத்தப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.