19 வருடங்களாக உறுதிப்படுத்தப்படாமல் கிடக்கும் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த 137 பேரின் எச்சங்கள்
சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த 137 பேரின் சடலங்களின் எச்சங்கள் காலி கராப்பிட்டிய மருத்துவ பீடத்தின் சட்ட வைத்திய பிரிவில் 19 வருடங்களாக உறவினர்கள் எவராலும் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளதாக நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் யூ.சி.பி. பெரேரா தெரிவித்தார்.
எனவே, இந்த சடலங்களின் எலும்பு பாகங்கள் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுனாமி அனர்த்தம் இடம்பெற்று
சுனாமி அனர்த்தம் இடம்பெற்று ஒரு மாதத்திலிருந்து ஒன்பது மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தெல்வத்தை மற்றும் பரலிய பிரதேசங்களில் சதுப்பு நிலங்களில் இந்த சடலங்களின் பாகங்கள் காணப்பட்டதாக அவர் கூறினார்.
அடையாளத்தை எவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை
சடலங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சிலரின் ஆடைகள் மற்றும் கண்ணாடிகள் இன்னமும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சட்ட வைத்திய அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் முதல் சில மாதங்களில் இந்த சடலத்தின் எலும்புகள் இறந்தவரின் உறவினர்களால் அடையாளம் காண கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போதிலும் அடையாளத்தை எவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை என சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.