போருக்குத் தயாராகுங்கள்… ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ள வடகொரிய ஜனாதிபதி
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்தினரையும், அணு ஆயுத படைகளையும் போருக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மோதல் போக்குக்கு பதிலடி
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்தினரை போருக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், ஆயுதங்கள் துறை, அணு ஆயுத பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளையும் போருக்குத் தயாராவதற்கான ஆயத்தங்களை விரைவாக்குமாறும் உத்தரவிட்டுள்ளதாக வடகொரிய ஊடக நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் வடகொரியாவுக்கெதிராக மோதல் போக்கை கடைப்பிடித்துவரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே கிம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக KCNA தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுடன் கைகோர்ப்பு
மேலும், வடகொரியா, ரஷ்யாவுடனான உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக வடகொரியா, ரஷ்யாவுக்கு ராணுவ உதவி செய்துவருவருவதாக அமெரிக்கா ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையில், வரும் ஏப்ரலில் தென்கொரியாவிலும், நவம்பரில் அமெரிக்காவிலும், ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற இருக்கும் நிலையில், வடகொரியா ராணுவ மற்றும் சைபர் தாக்குதல் நிகழ்த்தலாம் என அச்சம் உருவாகியுள்ளது.
ஆகவே, வடகொரியா தங்களுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடுமானால், கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என தென்கொரியா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.