கத்தார் நாட்டில் எட்டு இந்தியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம்
கத்தார் நாட்டில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியிருந்த நிலையில், அந்த விடயத்தில் முக்கிய திருப்பம் ஒன்று நிகழ்ந்து, சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்தியர்கள்
கத்தாரில் உள்ள Dahra Global என்னும் நிறுவனத்தில் பாதுகாப்பு சேவை வழங்கும் பணியில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
கடந்த ஆண்டு, அதாவது, 2022ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், அவர்களை கத்தார் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவர்கள் கைது செய்யப்பட்ட விடயமே அவர்களுடைய குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், அந்த எட்டு இந்தியர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அக்டோபர் மாதம் 26ஆம் திகதி கத்தார் அரசு அறிவித்தது நாட்டையே அதிரவைத்தது.
இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், சம்பந்தப்பட்டவர்களை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்தது.
அதைத் தொடர்ந்து, தீர்ப்பை எதிர்த்து இந்தியா சார்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கில் முக்கிய திருப்பம்
இந்நிலையில், அந்த எட்டுபேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை கத்தார் நீதிமன்றம் ஒன்று குறைத்துள்ளதாக தற்போது இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டுபேரின் தண்டனையும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களுக்கு தற்போது என்ன தண்டனை என்பதைக் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. அத்துடன், அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன என்பது குறித்து, கத்தார் அரசோ, இந்திய அரசோ இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்த செய்தி, மரண தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி அறிந்து அச்சத்தில் உறைந்திருந்த அந்த இந்தியர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பெரும் ஆறுதலையளித்துள்ளது.