விஜயகாந்த் மறைவு: சந்தனப்பேழையில் இடம்பெற்றிருக்கும் வாசகம்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்படவிருக்கும் சந்தனப் பேழையில், ஒரு வாசகம் இடம்பெற்றுள்ளது.
விஜயகாந்த் உடலை சுமக்கவிருக்கும் சந்தனப் பேழையில், ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. தேமுதிக நிறுவனத் தலைவர் என்றும், அதனுடன், அவரது பிறந்த தேதி மற்றும் மறைந்த தேதியும் இடம்பெற்றுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறுதிச் சடங்கு கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், அவரது இறுதி ஊர்வலம் தீவுத்திடலிலிருந்து தொடங்கியிருக்கிறது.
தேமுதிக தலைவரும், எதிா்க்கட்சி முன்னாள் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானாா்.
விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்தாா். உடல் நல பாதிப்புகள் காரணமாக, மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தாா்.
இதனிடையே, அவா் உடல்நலம் கடந்த செவ்வாய்க்கிழமை (டிச.26) மீண்டும் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் வியாழக்கிழமை (டிச.28) காலை 6.10 மணியளவில் அவா் உயிரிழந்தாா்.
மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் அலைகடல் என திரண்டு வந்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இன்று பகல் 2.30 மணிக்கு தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு, முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.