;
Athirady Tamil News

தலைவரின் கனவை அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றிபெறச் செய்வோம் – பிரேமலதா விஜயகாந்த்!

0

வெற்றிக்கனியை விஜயகாந்த் பாதத்தில் சமர்ப்பிக்கும் நாள்தான் தேமுதிகவுக்கு உண்மையான வெற்றி நாள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மறைவு
தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டு, அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்குக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது நன்றி.

தீவுத்திடலிலிருந்து கோயம்பேடு தலைமை அலுவலகம் வரை 14 கிமீ தூரம் நடந்த இறுதி ஊர்வலத்தில், வழிநெடுக விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய அத்தனை தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் என் நன்றி.

சமாதி அமைக்கப்படும்
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெருமை விஜயகாந்துக்கு கிடைத்திருக்கிறது.

கடந்த 2 நாட்களில் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு விஜயகாந்த் செய்த தர்மமும், அவருடைய நல்ல எண்ணமும், குணமும்தான் காரணம். அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல், சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்தின் கைவிரலில் இருக்கும் கட்சி மோதிரம் அகற்றப்படவில்லை. இன்று நாம், நம் தலைவரை இழந்திருக்கிறோம்.

இந்நாளில் நம் தலைவரின் கனவை அனைவரும் ஒன்று சேர்ந்து நிச்சயமாக வெற்றிபெறச் செய்து, அந்த வெற்றிக்கனியை அவரது பாதத்தில் சமர்ப்பிக்கும் நாள்தான் தேமுதிகவுக்கு உண்மையான வெற்றி நாள் என்பதை சூளுரைப்போம். கடற்கரையில் தலைவர்களுக்கு சமாதி அமைக்கப்பட்டுள்ளது போல தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்துக்கு சமாதி அமைக்கப்படும். ஒட்டுமொத்த தொண்டர்களும் வந்து வழிபடக்கூடிய கோயிலாக அது இருக்கும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.