நெல்லை, தூத்துக்குடி மழை பாதிப்பு – முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு..!
தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நேற்று(29-12-23) சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உதயநிதி அறிக்கை
இது குறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகனமழையாலும் – வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி – தென்காசி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் நேற்று(29-12-23) பங்கேற்றோம்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர்கள் – தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நம் முதலமைச்சர் அவர்கள், அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.