;
Athirady Tamil News

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

0

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்துள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:

மேற்கு மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை அடுத்துள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேலடுக்கு காற்றழுத்த சுழற்சியின் காரணமாக அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்றும், 29.12.2023 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும், 01.01.2024 மற்றும் 02.01.2024 ஆகிய நாட்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் 29.12.2023 நாளிட்ட அறிவிக்கையில் தெரிவித்திருந்தது.

இன்று (30.12.2023) காலை 8.30 மணி அளவில் மேற்கு மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை அடுத்துள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு அரபிக் கடல் மற்றும் அதனை அடுத்துள்ள மேற்கு மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 30.12.2023 நாளிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் (30.12.2023 8.30 மணி வரை) தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் சராசரியாக 0.16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் 4.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளதோடு பின்வரும் விவரப்படி கனமழை முதல் அதி கனமழை பதிவாகியுள்ளது.

மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் 7000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 2.91 லட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதையும், வெள்ளநீர் செல்வதை வேடிக்கை பார்ப்பதையும், நீர்நிலைகளில் நின்று சுயபடம் எடுப்பதையும் தவிர்க்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் மீனவர்களுக்கு பின்வருமாறு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

* 30.12.2023 மற்றும் 31.12.2023 – குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா மற்றும் மாலத் தீவு பகுதிகளில் 40-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
* 01.01.2024 – குமரிக்கடல் பகுதிகளில் காற்று 45-65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
* 02.01.2024 மற்றும் 03.01.2024 – குமரிக்கடல் பகுதிகளில் 40-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மேற்சொன்ன பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.