நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 40% க்கும் அதிகமானோர் அந்த நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளை முறையாக உட்கொள்வதில்லை என்பது தெரியவந்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிரமமே இதற்கு பிரதான காரணம் என நோயாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வகை மருந்துகளின் விலை அதிகரித்துள்ளதால், வழக்கம் போல் ஒரு மாதத்திற்கு மருந்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
எனவே, சுமார் ஒரு வாரத்திற்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதாகவும், நோயினால் சில அசௌகரியங்களை உணரும் போது மாத்திரமே அந்த மருந்துகளை பயன்படுத்துவதாகவும் இந்த நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்நோய்களுக்காக தனியார் மருத்துவ மனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் பாதி பேர் அரச வைத்தியசாலைகளின் கிளினிக்குகளுக்குச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலைமையால் அரசாங்க வைத்தியசாலைகளில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த சிகிச்சை நிலையங்களுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் அவ்வாறான கிளினிக்குகள் மூலம் ஒரு மாதத்திற்கு வழங்கப்பட்டு வந்த மருந்துகள் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் நோயாளர்கள் குறிப்பிடுகின்றனர்.