;
Athirady Tamil News

அரசு விரைவுப் பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்!

0

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.31) முதல் அரசு விரைவு போக்குவரத்துக் கழக (எஸ்இடிசி) பேருந்துகளும், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

கிளாம்பாக்கத்தில், பேருந்து முனையத் திறப்பு விழாவுக்குப் பிறகு அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தென் மாவட்டங்களிலிருந்து வரும் விரைவுப் பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை (டிச.31) முதல் கிளாம்பாக்கத்துக்கு வரும். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் செல்லாது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் சாதாரண நாள்களில் 300-ம், வார இறுதி நாள்களில் 360-ம் இயக்கப்படும். இந்த விரைவுப் பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்கப்படும்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் கிளாம்பாக்கத்திலிருந்து நகரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படும். கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிஷத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகை: விரைவு போக்குவரத்துக் கழகத்தைத் தவிா்த்து, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வந்து, அந்தந்த வழித்தடங்களில் இயங்கும். பொங்கல் பண்டிகை வரை இதே நிலை தொடரும். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும்.

ஆம்னி பேருந்துகள்: கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளும் சேவையைத் தொடங்கியுள்ளன. பொங்கல் பண்டிகை வரை சென்னை நகரத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கினாலும், அதற்குப் பிறகு முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

முன்பதிவு செய்த பயணிகள் கவனத்துக்கு: எஸ்இடிசி பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை முதல் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் என்பதால் இந்த பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள் கோயம்பேட்டிலிருந்து பயணிக்க முடியாது. இவா்கள் கிளாம்பாக்கத்துக்குச் சென்று, அங்கிருந்து உரிய பேருந்துகளில் பயணிக்கலாம். அதேபோன்று வெளியூா்களிலிருந்து சென்னைக்கு எஸ்இடிசியில் வரும் பயணிகள் கிளாம்பாக்கத்தில் இறங்கி, மாநகரப்பேருந்துகளில் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.