இலங்கை கல்வித்துறை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மார்ச் 2022 முதல் நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 3 முதல் 21 வயதுக்குட்பட்ட 54.9 வீதமான பெண்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வியை முற்றாக இடைநிறுத்தியவர்கள் 2.1 வீதம் எனவும் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, 3 முதல் 21 வயதுக்குட்பட்ட பெண்களின் கல்வியில் நகரப் பகுதியில் 54.2 வீதமும், கிராமப் புறத்தில் 55.1 வீதமும், பெருந்தோட்டப் பகுதியில் 55.1 வீதமும் தடைப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் 17.5 வீதமான பிள்ளைகள் கல்வியை மட்டுப்படுத்தியுள்ளதோடு கல்வியை முற்றாக இடைநிறுத்தியவர்களின் 2.1 வீதமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, இது 2023 பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்த குடும்ப ஆய்வு என்று பெயரிடப்பட்டுள்ளதோடு, கல்வி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம், குடும்ப வருமானம் மற்றும் செலவு, உடல்நலம் மற்றும் குடும்ப அலகுகளின் கடன் ஆகிய ஏழு தலைப்புகளின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.