புத்தாண்டில்156 பாலஸ்தீனர்கள் பலி: ஈரானுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை
மத்திய காசாவிலுள்ள மகாஸி முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில், கடந்த 24 மணிநேரத்தில் 156 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் மக்கள் புதுவருடப்பிறப்பை கொண்டாடும் தருணத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பொதுமக்கள் கொள்ளப்படுவது வருத்தமளிப்பதாக சர்வதேச அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் பல மாதங்களுக்கு போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸுக்கு எதிரான போர்
ஹமாஸுக்கு எதிரான போர் நடந்துவரும் சூழலில் செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்ரேல் பிரதமர் கூறியதாவது,
ஹமாஸுக்கு எதிரான போர் அனைத்து முனைகளில் இருந்தும் நடக்கிறது. இந்தப் போரில் வெற்றி காண இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது.
ஹமாஸை முற்றிலுமாக அழித்து, பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை தாக்குதல் தொடரும்; இதனால் பல மாதங்களுக்கு போர் நீடிக்கும்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தாக்குதலை நடத்துவதோடு வீரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை ஹமாஸை சேர்ந்த 8,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹிஸ்புல்லாவுக்கு எச்சரிக்கை
வடக்கு எல்லையில் இருந்து ஹிஸ்புல்லா தாக்குதல் தொடர்கிறது. ஹிஸ்புல்லா படையினர் தாக்குதலைத் தொடர்வார்கள் என்றால், அவர்கள் இதுவரை கனவிலும் கூட நினைத்திராத பதிலடியை எதிர்கொள்ள நேரிடும்.
இது ஈரானுக்கும் பொருந்தும். ஈரான் தீமையின் அச்சாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஈரானைக் கட்டுப்படுத்த, அதன் கைகளில் அணு ஆயுதங்கள் கிடைக்காமல் தடுக்க எதுவரையிலும் செல்வோம்” என்றார்.