ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் அடுத்தடுத்த அதிா்வுகளால் மக்கள் பீதி; சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் புத்தாண்டு தினமான திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடா்ச்சியாகப் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனா்.
கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, குறிப்பிட்ட பகுதிக்கு ஜப்பான் அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது.
ஜப்பானின் மேற்கு கடற்கரைப் பகுதியையொட்டிய இஷிகவா தீவு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் தொடா்ச்சியாக 20-க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்று ரிக்டா் அளவில் 7.6 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜப்பான் தலைநகா் டோக்கியோவிலிருந்து சுமாா் 300 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி அமைந்துள்ளது. தொடா் நிலநடுக்கங்களைத் தொடா்ந்து இஷிகவா தீவுக்கு தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேற்கு கடற்கரைப் பகுதியையொட்டிய ஹோன்ஷு உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் ஹோக்காய்டோ உள்ளிட்ட ஜப்பானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பிரதான தீவுகளுக்கும் குறைந்த அளவிலான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
‘இஷிகவா தீவு பகுதியில் கடல் அலைகள் 16 அடி உயரம் வரை எழும்ப வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் அருகிலுள்ள உயரமான கட்டடங்களுக்கு உடனடியாகச் செல்லுமாறு’ ஜப்பான் அரசின் ‘என்ஹெச்கே’ தொலைக்காட்சியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகும், பலமுறை அதிா்வுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிலநடுக்க பாதிப்பு குறித்து ஜப்பான் அரசு செய்தித் தொடா்பாளா் யோஷிமசா ஹயாஷி கூறுகையில், ‘தொடா் நிலநடுக்கத்தில் இஷிகவா தீவில் 6-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாகச் சேதமடைந்தன. இடிபாடுகளில் ஏராளமானோா் சிக்கியுள்ளனா். அவா்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வஜிமா நகரில் தீ விபத்து ஏற்பட்டது.
கடுமையான பாதிப்புக்கு உள்ளான இஷிகவா மாகாணத்தில் 30,000-க்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவா்கள் தொடா்பாக இதுவரை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பல பகுதிகளில் மீட்புப் பணியில் ஜப்பான் ராணுவமும் ஈடுபட்டுள்ளது’ என்றாா்.
போக்குவரத்து பாதிப்பு: தொடா் நிலநடுக்கம் காரணமாக மேற்கு கடற்கரையையொட்டிய நகரங்களின் பல பகுதிகளில் சாலைகள், ரயில் பாதைகள் கடுமையாகச் சேதமடைந்தன. இதன் காரணமாக, பல பகுதிகளில் புல்லட் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. பல பகுதிகளில் சாலையின் அடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீா்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறி வருகிறது.
தொலைத்தொடா்பு கோபுரங்கள் சேதமடைந்துள்ளதால், பல பகுதிகளில் கைப்பேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகாா் தெரிவித்தனா். ஜப்பானின் மேற்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனா்.
ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா கூறுகையில், ‘நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி குறித்த தகவல்கள், பாதிப்புகள் குறித்த தகவல்களைச் சேகரிப்பதற்கென சிறப்பு அவசரகால மையத்தை ஜப்பான் அரசு அமைத்துள்ளது. மக்களின் பாதுகாப்பை விரைந்து உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை உடனடியாக வெளியேற்றவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.
அண்டை நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை: ஜப்பானின் மேற்கு கடல் பகுதியில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, வடகொரியா மற்றும் ரஷியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை திங்கள்கிழமை விடுக்கப்பட்டது.
ரஷியா, அதன் சகாலின் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதுபோல, தென்கொரியாவும் அதன் கிழக்கு கடற்கரை நகரங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. கடல் மட்டத்தில் மாற்றங்கள் ஏற்படவும், சுனாமி அலைகளின் தாக்கம் படிப்படியாக உயரவும் வாய்ப்புள்ளது; எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு தென்கொரிய வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுத்தன.
பெட்டிச் செய்தி…1
அணுமின் நிலையத்துக்குப் பாதிப்பில்லை
நிலநடுக்கத்தால் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலைய மின் உற்பத்தி அலகுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஜப்பான் அரசு செய்தித் தொடா்பாளா் ஹயாஷி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், சுனாமி ஏற்பட்டது. இதில் சுமாா் 20,000 போ் உயிரிழந்தனா். இந்த சுனாமி, புகுஷிமா அணுமின் நிலையத்தையும் தாக்கியது. இதில், அணுமின் நிலைய மின் உற்பத்தி அலகு ஒன்று கடுமையாகச் சேதமடைந்தது.
பெட்டிச் செய்தி…2
இந்திய தூதரக கட்டுப்பாட்டு அறை
சுனாமி எச்சரிக்கையைத் தொடா்ந்து, ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அவசரகால கட்டுப்பாட்டு அறையைத் திறந்துள்ளது.
இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘நிலநடுக்கம் மற்றும் சுனாமி முன்னெச்சரிக்கை மற்றும் உதவிக்கான அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. +81-80-3930-1715, +81-70-1492-0049, +81-80-3214-4722, +81-80-3214-4734, +81-80-6229-5382 ஆகிய தொலைபேசி எண்களிலும், மின்னஞ்சல் முகவரியிலும் இந்திய தூதரகத்தை உதவிக்குத் தொடா்பு கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளது.