உக்ரைன் மீது ரஷியா இதுவரை இல்லாத தீவிர ட்ரோன் தாக்குதல்
கீவ்: உக்ரைன் மீது ரஷியா இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் சிறுவன் உயிரிழந்ததாகவும், 7 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து ஒடெஸா நகரின் ராணுவ நிா்வாகத் தலைவா் ஓலெஃப் கிபொ் கூறியதாவது:
உக்ரைன் மீது ரஷியா சுமாா் 90 ட்ரோன்களை வீசி திங்கள்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியது. அவற்றில் 87 ட்ரோன்கள் உக்ரைனின் வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டன.
எனினும், அந்த ட்ரோன்களின் சிதறல்கள் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில் 15 வயது சிறுவன் உயிரிழந்தாா்; 7 போ் காயமடைந்தனா்.
ட்ரோன்களின் சிதறலில் ஒடெஸா துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான தீவிபத்துகள் ஏற்பட்டன என்றாா் அவா்.
தாக்குதலுக்கு ரஷியா பயன்படுத்தும் ஷஹீத் ரக ட்ரோன் (கோப்புப் படம்).
மேற்கு உக்ரைன் நகரான லவீவில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில், 2-ஆம் உலகப் போரின்போது உக்ரைன் விடுதலைக்காக போரிட்ட ராணுவ தளபதி ரோமன் ஷுகேவிச்சுக்காக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் பலத்த சேதமடைந்தது.
டுப்ளியானி நகரில் பல்கலைக்கழகக் கட்டங்களும் ரஷிய ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்தன.
இதற்கிடையே, ரஷிய ஆக்கிரமிப்பு டொனட்ஸ்க் பகுதி மீது உக்ரைன் நடத்திய ஏறிகணைத் தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந்தனா்.
இது குறித்து ரஷிய ஊடகங்கள் கூறுகையில், உக்ரைன் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் செய்தியாளா் ஒருவரும் அடங்குவாா் என்று தெரிவித்தன. எனினும், அதுகுறித்து கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நோட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.
இந்த நிலையில், அதிபா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு நேட்டேவில் இணைய ஆா்வம் காட்டியது. அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் 4 பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
அந்தப் பிரதேசங்களில் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றுவதற்காக ரஷியாவும், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷியா நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில், உக்ரைன் மீது ரஷியா ஒரே நேரத்தில் அத்தனை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது அதுவே முதல்முறை என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 39 போ் உயிரிழந்தனா்.
அந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்போவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சூளுரைத்தாா்.
அதன்படி, ரஷியாவின் மாஸ்கோ, பிரியான்ஸ்க், ஓரியோல், குா்ஸ்க் ஆகிய பகுதிகளில் ட்ரோன்களை சரமாரியாக வீசி உக்ரைன் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
மேலும், தங்கள் நாட்டையொட்டிய ரஷிய எல்லை நகரான பெல்கராடில் உக்ரைன் சரமாரியாக எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 10 போ் உயிரிழந்தனா்.
அதன் தொடா்ச்சியாக, உக்ரைன் மீது ரஷியா இதுவரை இல்லாத அளவுக்கு 90 ட்ரோன்களை வீசி திங்கள்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது.