பராக் ஒபாமா இலங்கையில்: சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தற்போது இலங்கையில் தங்கிருப்பதாக வெளியாகிய தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரியவந்துள்ளது.
இலங்கையின் சுற்றுலாத் துறை, கடந்த சில மாதங்களாக குறிப்பிடத்தக்க எழுச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் பல புகழ்பெற்றவர்களும் இலங்கைக்கு வந்து செல்கின்றனர்.
தவறான செய்தி
இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தற்போது இலங்கையில் விடுமுறையை கழிப்பதாக தவறான சமூக ஊடக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும், அவர் இலங்கை வீதியிலுள்ள சிறிய விற்பனையகத்தில் இளநீரைக் குடித்துக்கொண்டிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
எனினும், பராக் ஒபாமா இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என்பதை பல நம்பத்தகுந்த தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
2016 இல் எடுத்த புகைப்படம்
இந்தநிலையில், பராக் ஒபாமா, இளநீரை ருசிக்கும் உண்மைப்படங்கள், 2016இல் அவர் அதிபராக இருந்தபோது லாவோஸுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் படங்கள் இந்தோனேசிய படைப்பாளரான அகன் ஹராஹாப்பினால் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.