யாழில் பழுதடைந்த உருளைக்கிழங்கை கிளிநொச்சியில் புதைக்க நடவடிக்கை
பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளை கிளிநொச்சி வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த 21 மெட்ரிக் தொன் உருளைக்கிழங்கு விதைகள் குப்பிளானில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த விதை உருளைக்கிழங்குகள் பெக்டோ பெக்டீரியம் கெரெட்டோபோரம் எனப்படும் பக்டீரியா தாக்கத்திற்குள்ளாமையினால் பழுதடைந்திருந்தமை தொடர்பில் கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி கண்டறியப்பட்டது.
குறித்த பக்டீரியா தாக்கத்தினால் 21 மெட்ரிக் தொன் விதை உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்த முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இது தொடர்பிலான கலந்துரையாடல் திணைக்கள தலைவர்கள், துறைசார் அதிகாரிகள் விவசாயிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது உருளைக்கிழங்கு விதைகளை பொலீத்தினில் பொதி செய்து பாதுகாப்பாக களஞ்சியசாலையில் இருந்து அகற்றி பாவனையற்ற வெளியான பகுதிகளில் புதைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதனை அடுத்து கிளிநொச்சி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் அவற்றை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் பொதுமக்களுக்கோ விவசாயிகளுக்கோ மண்ணுக்கோ நிலத்தடி நீருக்கோ பாதிப்பு ஏற்படாது என துறைசார் தரப்புகள் தெரிவிக்கின்றன.