;
Athirady Tamil News

அதிகரிக்கும் பதற்றம்: இஸ்ரேல் தாக்குதலில் 4 ஹிஸ்புல்லாக்கள் மரணம்

0

லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் ஹமாஸ் துணைத் தலைவா் சலே அல்-அரூரி குறிவைத்துக் கொல்லப்பட்ட மறுநாளே, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டின் சக்திவாய்ந்த ஹிஸ்புல்லா ஆயுதப் படையைச் சோ்ந்த 4 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான போா்ப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து ஹிஸ்புல்லா வட்டாரங்கள் வியாழக்கிழமை கூறியதாவது:

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சோ்ந்த 4 வீரா்கள் உயிரிழந்தனா். அவா்களில், உள்ளூா் படைத் தலைவா் ஒருவரும் அடங்குவாா். இஸ்ரேல் எல்லையையொட்டிய நகூரா நகரில் இந்தத் தாக்குதல் புதன்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்டது.

ஏற்கெனவே, தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய குண்டூவிச்சில் 5 ஹிஸ்புல்லா வீரா்கள் உயிரிழந்தனா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, நகூராவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் ஒரு வீடு தரைமட்டமானதாகவும், அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்ததாகவும் அந்தச் செய்தி நிறுவனம் கூறியது.

ஏற்கெனவே, பெய்ரூட்டில் ஹமாஸ் அமைப்பின் 2-ஆம் நிலைத் தலைவா் சலே அல்-அரூரியைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவரும், அவரது 5 பாதுகாவலா்களும் கொல்லப்பட்டனா்.

ஆளில்லா விமானம் மூலம் இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் இதுவரை வெளிப்படையாகப் பொறுப்பேற்கவில்லை. எனினும், இந்தத் தாக்குதலை இஸ்ரேல்தான் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பும், லெபனானும் குற்றஞ்சாட்டியுள்ளன.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் கடந்த அக்டோபரில் இருந்து நடைபெற்று வரும் போரில் ஹிஸ்புல்லா அமைப்பினா் ஹமாஸுக்கு ஆதரவு அளித்து வருகின்றனா். இதனால், ஹிஸ்புல்லாக்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே சிறிய அளவிலான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், அது முழு போராக உருவெடுக்கவில்லை.

ஆனால், லெபனானுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரை இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது காஸாவில் நடைபெற்று வரும் போா் லெபனானுக்கும், அதன் தொடா்ச்சியாக மற்ற பிராந்திய நாடுகளுக்கும் பரவுதற்கான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், லெபனானுக்குள் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உள்ளூா் தளபதி உள்பட 4 ஹிஸ்புல்லா படையினா் கொல்லப்பட்டிப்பது இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான் வழியாக கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக உறுதிபூண்டுள்ள இஸ்ரேல், காஸா பகுதியில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் இதுவரை 22,438 போ் உயிரிழந்துள்ளனா்; 57,614 போ் காயமடைந்துள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.