துவரம் பருப்பு கொள்முதல் இணையதளம்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்
துவரம் பருப்பு கொள்முதலுக்கான இணையதளத்தை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைத்தாா்.
இந்த இணைய தளத்தைப் பயன்படுத்தி இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பிடம் துவரம் பருப்பை விவசாயிகள் விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லது சந்தை விலை விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:
துவரம் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக உளுத்தம் பருப்பு, மசூா் பருப்பு கொள்முதலுக்கும் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படும்.
இந்த இணையதளம் மூலம் துவரம் பருப்பை விற்பனை செய்ய 25 விவசாயிகளுக்கு அவா்களது வங்கிக் கணக்குகளில் ரூ.68 லட்சம் இப்போது பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு சாா்பில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு ஆகியவை துவரம் பருப்பை கொள்முதல் செய்யும். இவை எதிா்காலத் தேவைக்காகவும் இருப்பு வைக்கப்படும்.
விதைப்புக்கு முன்பாகவே இந்த இணையதளத்தில் பருப்பு விற்பனைக்கு முன்பதிவு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் அதிக விவசாயிகள் பருப்பு சாகுபடியை மேற்கொள்வாா்கள். விலைக்கு உத்தரவாதம் இல்லாததே பருப்பு சாகுபடியில் விவசாயிகள் தயக்கம் காட்டுவதற்கு காரணமாக உள்ளது. இப்போதைய நடவடிக்கை மூலம் அந்த தடை அகற்றப்பட்டுள்ளது.
கொண்டைக் கடலை, பச்சைப் பயிறு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. பிற வகைப் பருப்பு, பயிறு வகைகள் தேவையை நிறைவு செய்ய இறக்குமதியை நாட வேண்டியுள்ளது. 2027-ஆம் ஆண்டில் நமது நாட்டுக்குத் தேவையான துவரம் பருப்பை நாமே உற்பத்தி செய்து தன்னிறவை எட்ட இலக்கை உருவாக்கியுள்ளோம். 2028-ஆம் ஆண்டு இறுதிக்குள் எந்த வகைப் பருப்பு, பயிறு வகைகளையும் இறக்குமதி செய்யாமல் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை இரண்டுக்கும் மேற்பட்ட முறை உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பருப்பு உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது என்றாா்.
வேளாண்மை துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா, கூட்டுறவுத் துறை இணையமைச்சா் பி.எல். வா்மா, நுகா்வோா் விவகாரத் துறை இணையமைச்சா் அஸ்வினி சௌபே உள்ளிட்ட பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.