;
Athirady Tamil News

நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் -மேற்பார்வையாளரான பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்

0

நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் புதன்கிழமை(3) மீண்டும் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மரணமடைந்த சிறுவனின் தந்தை சகோதரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்ததுடன் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திப் பின்னணி

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சிறுவனின் மர்ம மரணம் தொடர்பில் கடந்த புதன்கிழமை (29.112023)அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்து உள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்ததை அடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் குறித்த மரணம் அடி காயங்கள் காணப்படுவதாகவும் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜனகீதன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த பாடசாலைக்கு சென்று தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த சிறுவனை அன்று தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் 25 வயது மதிக்கத்தக்க அப்பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டார்.இவ்வாறு கைதான சந்தேக நபர் சனிக்கிழமை(2) இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் குறித்த சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில் சம்பவ தினமான இரவு உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை என முன்னுக்கு பின்னான வாக்குமூலங்கங்கள் வழங்கியதை தொடர்ந்தே சந்தேகத்தின் பேரில் பாடசாலை மேற்பார்வையாளரான அப்பெண் பொலிஸ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் சனிக்கிழமை(2) இரவு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தனது மகனின் மரணத்தில் பலவிதமான பொய் குற்றச்சாட்டுகளையும் பாடசாலையின் நிர்வாகம் முன் வைப்பதாகவும் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் நாங்கள் எமது பிள்ளைக்கு நடந்த இதே போன்ற சம்பவங்கள் யாருக்கும் இடம் பெறக் கூடாது என்றும் பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் மரணம் அடைந்தவரின் தந்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.