;
Athirady Tamil News

எல்-1 புள்ளியை இன்று அடைகிறது ஆதித்யா விண்கலம்

0

ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான எல்-1 புள்ளியை சனிக்கிழமை (ஜன.6) மாலை 4 மணிக்கு சென்றடைய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அங்கிருந்தபடி, அந்த விண்கலம் சூரியனின் புற வெளி ஆய்வு குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

செவ்வாய், நிலவைத் தொடா்ந்து சூரியனின் புற வெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்கான முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டது.

அதன்படி, ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலம் வடிவமைக்கப்பட்டு, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக கடந்த ஆண்டு செப். 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் சோலாா் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ஸ்ட்ரோ மீட்டா் உள்பட 7 விதமான ஆய்வு கருவிகள் இடம் பெற்றுள்ளன.

பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கிமீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (எல்-1) எனும் புள்ளியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈா்ப்பு விசை சமமாக இருக்கும். அந்த புள்ளியில் நிலைநிறுத்தப்படவுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்தபுலம் உள்ளிட்டவற்றை அறிவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்த திட்டத்துக்கு இதற்கு விண்வெளி இயற்பியல் ஆராய்ச்சி மையம் (ஐஐஏ), விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி இயற்பியல் மையம் (ஐயூசிஏஏ), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (ஐஐஎஸ்இஆா்) ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.

ஏறத்தாழ 4 மாதங்களுக்கும் மேலாக (127 நாள்கள்) பல கட்ட பயணத்தை மேற்கொண்டு சூரியனின் எல்-1 புள்ளிக்கு அருகே தற்போது ஆதித்யா விண்கலம் சென்று கொண்டிருக்கிறது.

இன்று நிலைநிறுத்தம்: இந்த நிலையில், எல்-1 புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய ஒளிவட்டப்பாதையில் சுமாா் 1,475 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலம் சனிக்கிழமை (ஜன.6) மாலை 4 மணியளவில் நிலைநிறுத்தப்படவுள்ளது. பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்தபடி இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணிக்க உள்ளனா்.

திட்டமிட்டபடி விண்கலம் நிலைநிறுத்தப்பட்ட பின்னா் எல்-1 புள்ளியை வலம் வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியா் பகுதிகளை ஆதித்யா கலன் ஆய்வு செய்யும். இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகளாகும்.

சூரியனை ஆய்வு செய்ய இதுவரை அமெரிக்கா, ஜொ்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. இந்த திட்டம் வெற்றி பெற்றால் இந்தியா அந்த வரிசையில் நான்காவது நாடாக உருவெடுக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.