Facebook விளம்பரத்திற்கு மட்டும் பெருந்தொகையை செலவிடும் ரிஷி சுனக்: எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்
ஆட்சியில் நீடிக்கும் பொருட்டு Facebook விளம்பரத்திற்கு மட்டும் பிரதமர் ரிஷி சுனக் பெருந்தொகையை செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளம்பரத்திற்காக செலவிடும் தொகை
இது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தேர்தல் விளம்பரத்திற்காக செலவிடும் தொகையை விடவும் அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும் தேர்தலுக்காக ஒரு கட்சி 35 மில்லியன் பவுண்டுகள் வரையில் செலவிடலாம் என ஆளும் கட்சி முடிவு செய்துள்ள நிலையிலேயே பிரதமர் ரிஷி சுனக்கின் இந்த விளம்பரம் தொடர்பான தரவுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ஆனால் இப்படியானமாற்றங்கள் அரசியல் நன்கொடைகளின் வெளிப்படைத் தன்மையையும் தேர்தல்களில் பொதுமக்களின் நம்பிக்கையையும் சேதப்படுத்த வாய்ப்பிருப்பதாக தேர்தல் கண்காணிக்கும் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சியினர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேர்தல் விளம்பரத்திற்காக பெருந்தொகையை செலவிட்டுள்ளனர். குறிப்பாக ரிஷி சுனக் பேஸ்புக் பக்கத்தில் மட்டும் 104,500 பவுண்டுகள் செலவிட்டு விளம்பரம் முன்னெடுத்துள்ளனர்.
ஆனால் இதே டிசம்பர் மாதத்தில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செலவிட்ட தொகை வெறும் 87,229 பவுண்டுகள் என்றே தெரியவந்துள்ளது. இதேவேளை லேபர் கட்சியினர் தங்களது முதன்மையான பேஸ்புக் பக்கத்தில் விளம்பரத்திற்காக 26,399 பவுண்டுகள் மட்டுமே செலவிட்டுள்ளனர்.
அத்துடன் கீர் ஸ்டார்மரின் பேஸ்புக் பக்கத்தில் 4,436 பவுண்டுகள் செலவிட்டு விளம்பரம் செய்துள்ளனர். முன்னதாக, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தேர்தல் முன்னெடுக்கப்படலாம் என்று தான் எதிர்பார்ப்பதாக ரிஷி சுனக் கூறியிருந்தார்.
35 மில்லியன் பவுண்டுகள் வரையில்
அமெரிக்காவில் தேர்தல் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு நவம்பரில் பிரித்தானியாவில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் சிலர் ஊகிக்கிறார்கள். 2016 தேர்தலில் பேஸ்புக் விளம்பரத்திற்காக மட்டும் பல மில்லியன் செலவிட்டு அதில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெற்றியும் கண்டுள்ளார்.
ஆனால் தற்போது டிரம்பை விடவும் அதிக தொகையை ரிஷி சுனக் செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் ரிஷி சுனக்கின் பேஸ்புக் பக்கமானது நாளுக்கு 15,000 பவுண்டுகள் விளம்பரத்திற்காக செலவிடுகிறது,
அத்துடன் தேர்தல் பரப்புரை தொடர்பிலான அண்மை தகவல்களுக்கு தமது பேஸ்புக் பக்கத்தை பின் தொடரவும் கோருகிறது. நவம்பர் மாதத்தில் தான், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலுக்காக 35 மில்லியன் பவுண்டுகள் வரையில் செலவிடலாம் என்று அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னர் ஓவ்வொரு தொகுதிக்கும் ஒரு கட்சி 30,000 பவுண்டுகள் வரையில் செலவிடலாம் என இருந்தது. இதனால் மொத்தமாக 19.5 மில்லியன் பவுண்டுகள் ஒவ்வொரு கட்சியும் செலவிட நேர்ந்தது.
கன்சர்வேட்டிவ் கட்சி மட்டும் 2019 தேர்தலில் 16.5 மில்லியன் பவுண்டுகள் தொகையை செலவிட்டுள்ளது. ஆனால் 2024 தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி கண்டிப்பாக பெருந்தொகையை செலவிடும் என்றே கூறப்படுகிறது.