நடுவானில் வெடித்த விமான கதவு… மொத்தமாக 170 விமானங்களுக்கு பறக்க தடை விதிப்பு
அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் திடீரென்று வெடித்த சம்பவத்தை அடுத்து மொத்தமாக 170 விமானங்களுக்கு பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவு
அமெரிக்க விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 170 போயிங் 737 MAX 9 விமானங்களை உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
சில போயிங் 737 மேக்ஸ் 9 விமானங்கள் சேவையை தொடங்கும் முன்னர் உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் கோரியுள்ளதாகவும் அமெரிக்க விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மொத்தம் 171 விமானங்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும், ஒரு விமானமானது விரிவான சோதனைக்கு உட்படுத்த 4 முதல் 8 மணி நேரமாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலை பகிர்ந்து கொள்வோம்
முன்னதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தின் போயிங் 737 MAX 9 விமானம் ஒன்றின் கதவு நடுவானில் திடீரென்று வெடித்து பறந்தது.
மொத்த பயணிகளையும் கடும் பீதியில் தள்ளிய இந்த சம்பவத்தை அடுத்து அந்த விமானம் 171 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை அடுத்து, என்ன நடந்தது என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், திரட்டப்படும் தகவலை பகிர்ந்து கொள்வோம் என்று அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.