கன மழை… பெருவெள்ளத்தில் மொத்தமாக மூழ்கிய பிரித்தானியா: ஸ்தம்பிக்கும் போக்குவரத்து
பிரித்தானியாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு இன்றும் தொடர வாய்ப்பிருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள்
இந்த வாரம் கன மழையால் அவதிப்பட்ட பிரித்தானியாவில், சுமார் 1,000 வீடுகள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் பல எண்ணிக்கையில் ஆறுகள் கரைபுரண்டதாகவும் கூறப்படுகிறது.
தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறும் கட்டாயத்திகு தள்ளப்பட்டனர். இதனிடையே, ஹென்க் புயல் காரணமாக செவ்வாயன்று ஒரு ஆணும் பெண்ணும் தனித்தனியாக மரணமடைந்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை பகல் நாட்டின் பல பகுதிகளில் 245 வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து முழுவதும் ரயில் போக்குவரத்து தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என ரயில் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
வியாழன் அன்று பெட்ஃபோர்ட்ஷையரில் ஆர்லேசி அருகே நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும், சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
வெப்பநிலை -6C வரை குறையும்
மேலும், திங்களன்று அந்த பாதையில் ரயில் சேவை முன்னெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், அதுவரையில் பேருந்து போக்குவரத்து சேவையை மக்கள் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் காரணமாக குளோசெஸ்டர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே வெப்பநிலை தென்மேற்கு இங்கிலாந்தின் கிராமப்புற பகுதிகளில் -4C வரை குறைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை இரவு Shropshire மற்றும் north Herefordshire-ல் உள்ள வெல்ஷ் எல்லையில் உள்ள கிராமப்புறங்களில் வெப்பநிலை -6C வரை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.