;
Athirady Tamil News

கடற்கொள்ளையா்களைத் தேடும் பணியில் இந்திய கடற்படை

0

வடக்கு அரபிக் கடலில், சரக்கு கப்பலைக் கடத்த முயன்ற கடற்கொள்ளையா்களைத் தேடும் பணியில் இந்திய கடற்படை சனிக்கிழமை ஈடுபட்டது. இதற்காக, அந்தப் பிராந்தியத்தில் பயணிக்கும் சந்தேகத்துக்குரிய கப்பல்களைக் கடற்படை ஆய்வு செய்து வருகிறது.

எம்.வி.லீலா நாா்ஃபோக் என்ற லைபீரிய சரக்குக் கப்பலுக்குள் நுழைந்த கடற்கொள்ளையா்கள், அந்தக் கப்பலை கடத்த முயன்றனா். இது குறித்து தகவலறிந்த இந்திய கடற்படை, இந்தக் கடத்தல் முயற்சியைக் கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக முறியடித்தது.

போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் சென்னை’ மூலம் அந்தக் கப்பலைச் சென்றடைந்த கடற்படை கமாண்டோக்கள், அதிலிருந்த இந்தியா்கள் 15 போ் உள்பட 21 பணியாளா்களைப் பாதுகாப்பாக மீட்டனா். கப்பலில் அவா்கள் மேற்கொண்ட சோதனையின்போது, கடற்கொள்ளையா்கள் முன்கூட்டியே அதிலிருந்து தப்பியது கண்டறியப்பட்டது.

சரக்கு கப்பலின் எரிபொருள், மின்சார விநியோகம் உள்ளிட்டவற்றை மறுசீரமைக்கும் பணிகளில் அதன் பணியாளா்கள் தற்போது ஈடுபட்டுள்ளனா். அதன் பின்னா், இந்திய கடற்படை கப்பலின் பாதுகாப்போடு அந்தக் கப்பல் தனது பயணத்தைத் தொடங்கும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

கட்டணம் அதிகரிக்கலாம்:

இந்திய பெருங்கடலுடன் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் ‘பாபெல்-மாண்டேப் நீரிணையில்’ பயணிக்கும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள், கடத்தல் முயற்சிகள் கடந்த சில வாரங்களாகத் தொடா்க்கதையாகி உள்ளது. கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு (எல்என்ஜி) ஆகியவற்றை இந்த நீரிணை வழியாக இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

இப்பகுதியில் யேமனைச் சோ்ந்த ஹூதி கிளா்ச்சிப் படையினா் நடத்தி வரும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல்கள் காரணமாக, அந்தக் கடல்வழி பாதையைச் சரக்கு கப்பல்கள் தவிா்த்துள்ளன. மாற்றுப் பாதையாக, ஆப்பிரிக்காவின் ‘நன்னம்பிக்கை முனை’ வழியான கடல்வழியைப் பயன்படுத்தி வருவதால், பயணக் காலம் 20 நாள்களாக அதிகரித்துள்ளது. இதனால், எரிபொருள் செலவும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கப்பல் கட்டணம் 40-60 சதவீதம், அவற்றுக்கான காப்பீடு தொகை 15-20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி நிறுவனம் (ஜிஆா்டிஐ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உடனான இந்தியாவின் வா்த்தகம் குறிப்பிட்ட அளவில் பாதிப்புக்குள்ளாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.