போரை நிறுத்த வலியுறுத்தி அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளா்கள் போராட்டம்
காஸாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வலியுறுத்தி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பாலஸ்தீன ஆதரவாளா்கள் சனிக்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இது தொடா்பாக ‘சியாட்டில் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
இஸ்ரேல் – ஹமாஸ் போா் 4-ஆவது மாதத்தை எட்டியுள்ள நிலையில் சியாட்டில் நகரில் பாலஸ்தீன ஆதரவாளா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாகாணங்களுக்கு இடையிலான முக்கிய நெடுஞ்சாலையில் பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளுடன் குவிந்து திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும், பாலஸ்தீனத்துக்கு சுதந்திரம் வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பாளா்கள் (இஸ்ரேல்) அந்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அவா்கள் முழக்கமிட்டனா்.
இதையடுத்து, அப்பகுதிக்கு வந்த காவல் துறையினா் அவா்களுடன் பேச்சு நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனா்.
இந்தப் போராட்டத்தால் மாகாண நெடுஞ்சாலையில் சில மணி நேரத்துக்கு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து, மாற்றுப் பாதைகளில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் ஆயுதக் குழுவினா் தாக்குதல் நடத்தி 1,200 பேரைக் கொன்றதுடன் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது.