இந்தியாவிற்கு சவாலாக மாறியுள்ள மாலைதீவு அமைச்சர்களின் செயல்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
அமைச்சர்கள் பலரின் சேவைகளை இடைநிறுத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக ஊடகங்கள் ஊடாக இந்திய பிரதமரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிடுவது தொடர்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாலைதீவில் ஆண் அமைச்சர் ஒருவருடைய பதவியும் பெண் அமைச்சர் ஒருவருடைய பதவியும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
இராஜதந்திர உறவுகள்
இதற்கிடையில், மாலைதீவு அமைச்சர் ஒருவர் இந்தியா தொடர்பாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கையின் அடிப்படையில் பல இந்திய பிரஜைகள் மாலைதீவு பயணத்தை ரத்து செய்து வருவதாக கூறப்படுகிறது.
இது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளில் அண்மைக்காலமாக நிலவும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்யும் என வெளிநாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியாவுக்கு சவால்
மாலைதீவு அமைச்சர் அப்துல்லா மசூம் மஜீத், தனது ‘எக்ஸ்’ ஸ்பேஸில் மாலைதீவு சுற்றுலாத் துறையை வளர்ப்பதில் இந்தியாவுக்கு சவாலாக மாறியிருப்பதாக சர்ச்சைக்குரிய குறிப்பைப் பதிவிட்டிருந்தார், அந்தச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தியர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, மொஹமட் முய்சு மாலைதீவின் அதிபராக பதவியேற்றதன் பின்னர், சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு அவர் உழைத்துள்ளதாகவும், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை சீனா செல்லவுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.