நிலவுக்கு ஆய்வுக் கலம் அனுப்பியது அமெரிக்கா
கேப் கனாவெரல்: நிலவில் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொள்வதற்கான ஆய்வுக் கலத்தை சுமாா் 50 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக அமெரிக்கா அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனமான அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பெரக்ரின் லூனாா் லேண்டா் 1, அந்த நாட்டின் ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
யூனைட்டட் லாஞ்ச் அலையன்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய வல்கன் ராக்கெட் மூலம் அந்த ஆய்வுக் கலம் செலுத்தப்பட்டது. வரும் பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி அந்த ஆய்வுக் கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அது வெற்றிகரமாகத் தரையிறங்கினால் நிலவில் ஆய்வுக் கலத்தைத் தரையிறக்கிய முதல் தனியாா் நிறுவனம் என்ற பெருமையை அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் பெறும்.
இதற்கு முன்னா் கடந்த 1972-ஆம் ஆண்டில்தான் நிலவுக்கு அமெரிக்கா தரையிறங்கும் ஆய்வுக் கலத்தை அனுப்பியது.