பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… மத்திய கிழக்கு நாட்டவர் ஒருவருக்கு கல்விக்கான அனுமதியை மறுக்கும் கனடா
கனடாவின் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதி மறுத்த பெடரல் அரசின் முடிவை எதிர்த்து ஈரானியர் ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
நேரில் கலந்து கொள்ள வேண்டும்
கனடாவின் பாதுகாப்புக்கு அந்த நபர் அச்சுறுத்தலாக மாற வாய்ப்பிருப்பதாக கூறியே, கனேடிய நிர்வாகம் அவருக்கு படிக்க அனுமதி மறுத்துள்ளது. அக்டோபர் 2019ல், ஈரானியரான Reza Jahantigh மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்பதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்தார்.
தொடர்ந்து பிளாக்செயின் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய தமது படிப்பின் முதல் செமஸ்டர்களை 2020ல் ஈரானில் இருந்து ஒன்லைனில் முடித்துள்ளார். ஆனால் அவரது முனைவர் பட்டத்தின் மீதமுள்ள படிப்புகளுக்கு அவர் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையிலேயே பெடரல் நிர்வாகம் அவருக்கு படிக்க அனுமதி மறுத்துள்ளது. அவர் ஆதரவாக நீதிமன்றத்தை நாடியுள்ள சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கையில், மாணவர்களின் செயல்பாடுகள் கனடாவுக்கு ஆபத்தை விளைவிப்பதற்கான எந்த ஆதாரத்தையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்
முன்னதாக தனது படிப்பு அனுமதி விண்ணப்பம் தொடர்பில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த பிறகு, டிசம்பர் 2022ல், ஜஹாந்திக் ஃபெடரல் நீதிமன்றத்தை தலையிட்டு குடிவரவுத் துறைக்கு முடிவெடுக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் தற்போது 33 வயதாகும் Reza Jahantigh ஜூன் 2016 முதல் மார்ச் 2018 வரையில் ஈரானிய ராணுவத்தில் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றியுள்ளதும், அதன் பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி மூத்த மென் பொருள் பொறியாளராக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளதும் தற்போது கனடாவில் படிப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக சில ஆண்டுகள் ஈரானிய இளைஞர்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாலையே அவர் சேவையாற்றியதாக கனேடிய சட்டத்தரணி விளக்கமளித்துள்ளார். அத்துடன், அவர் மென் பொருள் நிறுவனத்தில் பணியாற்றியதும் அரசு தொடர்புடையதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.