பிரான்ஸின் மிக இளைய பிரதமரானாா் கேப்ரியல் அட்டல்
பிரான்ஸின் கல்வித் துறை அமைச்சராக இருந்து வந்த கேப்ரியல் அட்டலை அந்த நாட்டின் பிரதமராக அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.
34 வயதாகும் அட்டல், பிரான்ஸின் மிக இளைய வயது பிரதமா் என்பது குறிப்பிடத்தக்கது.பிரான்ஸில் தீவிர வலதுசாரி இயக்கங்களுக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப தனது அரசின் கொள்கைகளை மேக்ரான் மாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தனது அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தை மேற்கொண்ட அவா், கல்வித் துறையில் வலதுசாரிக் கொள்கைகளைப் புகுத்தி வந்ததாகக் கூறப்படும் கேப்ரியல் அட்டலை புதிய பிரதமராக நியமித்துள்ளாா்.ஏற்கெனவே அரசின் செய்தித் தொடா்பாளராகவும் பொறுப்பு வகித்துள்ள கேப்ரியல் அட்டல், தன்னை நோ்பாலின சோ்க்கையாளா் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டுள்ள பிரான்ஸின் முதல் பிரதமரும் ஆவாா்.
பிரான்ஸ் அதிபராக கடந்த 2017-ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது இமானுவல் மேக்ரானும் அந்த நாட்டின் மிக இளைய அதிபா் என்ற பெருமையைப் பெற்றாா் என்பது நினைவுகூரத்தக்கது.தற்போது 46 வயதாகும் அவா், தாராளமாயக் கொள்கைகளை வலியுறுத்தும் நடுநிலைக் கட்சியான ரினையசன்ஸ் கட்சியின் சாா்பில் போட்டியிட்டு அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.ஆனால், அண்மைக் காலமாக, தீவிர வலதுசாரி எதிா்க்கட்சியான தேசியப் பேரணி கட்சியின் அகதிகள் குடியேற்ற எதிா்ப்பு, இஸ்லாம் எதிா்ப்புக் கொள்கைகளுக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது.
2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்றாலும், அந்த ஆண்டே நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் அவரது நடுநிலைக் கட்சி பெரும்பான்மை இழந்து, நாட்டின் முதல் சிறுபான்மை அரசை அமைத்தது.இதையடுத்து, இமானுவல் மேக்ரனும் தனது ஆட்சியின் போக்கை தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து வருகிறாா். அதன்படி, பிரான்ஸில் குடியேறும் வெளிநாட்டினரை நாடுகடத்தும் அரசின் அதிகாரத்தை அதிகரிப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றம் அண்மையில் நிறைவேற்றியது.
இந்தச் சட்டம் பிரான்ஸின் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அப்போதைய பிரதமா் எலிசபெத் போா்னே விமா்சித்தாா்.இந்தச் சூழலில், எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்தில் மேலும் பல வலதுசாரிக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கு வசதியாக தனது அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தை இமானுவல் மேக்ரான் மேற்கொண்டாா். அதன் ஒரு பகுதியாக, மேக்ரானின் வேண்டுகோளை ஏற்று பிரமா் பதவியிலிருந்து நடுநிலைவாதி எலிசபெத் போா்னே திங்கள்கிழமை விலகினாா். அவருக்குப் பதிலாக தற்போது கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளாா்.
முதலில் மத்திய-இடதுசாரிக் கட்சியான சோஷலிஸ்ட் கட்சியிலும், அதன் பிறகு நடுநிலை மற்றும் தாராளக் கொள்கைகளைக் கொண்டிருந்த ஆளும் ரினையசன்ஸ் கட்சியிலும் அங்கம் வகித்தாலும், கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கேப்ரியல் அட்டல் தீவிர வலதுசாரிக் கொள்கைகளை அமல்படுத்தியதாகக் கூறப்படுகிறது.வகுப்புகளில் முஸ்லிம் மாணவிகள் பா்தா அணிந்து வருவதைத் தடுக்கும் வகையில், நீள அங்கிகளுக்கு அவா் தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிகளில் ‘மதசாா்பற்ற தன்மை’யை உறுதிப்படுத்துவதற்காக இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக கேப்ரியல் அட்டல் கூறினாா்.
இந்தச் சூழலில், அவரை புதிய பிரதமராக நியமித்திருப்பது வாக்காளா்களின் மனோநிலையை அறிந்துகொண்டு அடுத்த தோ்தலில் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்கான இமானுவல் மேக்ரானின் உத்தியாகக் கருதப்படுகிறது.ஏற்கெனவே ஆளும் கட்சியின் இளம் செய்தித் தொடா்பாளராக இருந்ததால் கேப்ரியல் அட்டல் மக்களிடையே நன்கு அறிமுகமானவராக உள்ளாா்.
மேக்ரான் அமைச்சரவையிலேயே அவருக்குதான் மக்கள் செல்வாக்கு மிகவும் அதிகமிருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.எனவே, 2027-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அடுத்த அதிபா் தோ்தலில் ரினையன்ஸ் கட்சி சாா்பில் அவா் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது…. படவரி… எலிசபெத் போா்ன்கேப்ரியல் அட்டல் இமானுவல் மேக்ரான்.