64 வயதில் 7200 கிலோமீட்டர் நடைபயணம்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த 64 வயதான சில்லா ஸ்ரீனிவாச சாஸ்திரி எனும் நபர் அயோத்தி ராமர் கோயிலை நோக்கி 7,200 கிலோமீட்டர் பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேலும் கையில் வெள்ளியால் ஆன தங்க முலாம் பூசப்பட்ட காலணியைக் கொண்டு செல்கிறார்.
வரும் ஜனவரி 22 நடக்கவிருக்கும் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கால்நடைப் பயணமாக கிளம்பியுள்ளார். அவர் வைத்திருக்கும் காலணி 8 கிலோகிராம் வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.
அந்த காலணியை ஜனவரி 16 அன்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கொடுக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 20 அன்று தன் கால்நடைப் பயணத்தை துவங்கியதாகவும், ஜனவரி 15 அயோத்தியை அடைந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். ராமேசுவரம் – அயோத்தி பாதையை அவர் தேர்ந்தெடுத்து பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ராமர் அயோத்தியிலிருந்து ராமேசுவரத்திற்கு வந்த பாதையை மனதில் கொண்டு இந்த வழியில் நடைபயணம் மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
ஜனவரி 16 ஆம் நாள் துவங்கும் சிலை பிரதிஷ்டை விழா 7 நாள்கள் நடைபெறும். கடைசி நாளான ஜனவரி 22-ல் காலை பூஜை முடிந்தபின் சிலை பிரதிஷ்டை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.