புலம்பெயர்மக்களை மொத்தமாக வெளியேற்ற ஜேர்மனியில் ரகசிய ஆலோசனைக் கூட்டம்: சேன்ஸலர் கடும் கண்டனம்
மில்லியன் கணக்கான புலம்பெயர்மக்களை நாடு கடத்தும் திட்டம் தொடர்பில் ஜேர்மனியில் தீவிர வலதுசாரிகள் குழு ஆலோசனக் கூட்டம் முன்னெடுத்த தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரகசிய கூட்டம்
குறித்த தகவல் வெளியான நிலையில் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தீவிர வலதுசாரிகளான AfD மற்றும் neo-Nazis அரசியல்வாதிகள் குழு ஒன்று பெர்லின் நகருக்கு வெளியே குடியிருப்பு ஒன்றில் ரகசிய கூட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதில் புலம்பெயர் மக்கள் உட்பட ஜேர்மானியர் அல்லாத இனப் பின்னணி கொண்ட மக்கள் மில்லியன் கணக்கானோரை வெளியேற்றும் திட்டம் தொடர்பில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜேர்மனியில் யாரும் இனப் பாகுபாடு காட்ட அனுமதிக்க முடியாது என்று சேன்ஸலர் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுமார் 20 அரசியல்வாதிகள் இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்றே தகவல் கசிந்துள்ளது.
நவ-நாஜிக்கள்
மேலும், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா முழுவதும் உள்ள நவ-நாஜிக்களில் குறிப்பிடத்தக்க தலைவர்கள் இந்த ரகசிய கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அத்துடன் CDU கட்சியின் இரு உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
ஜேர்மனியின் குடிமக்களாக இருந்தாலும், ஜேர்மன் அல்லாத இனப் பின்னணியைக் கொண்டவர்களை நாடுகடத்தவே இந்த கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொள்கையளவில் திட்டத்தின் மீது எந்த ஆட்சேபனையும் எந்த உறுப்பினர்களும் எழுப்பவில்லை என்றும், அதன் சாத்தியக்கூறு பற்றிய சந்தேகங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.