தமிழர்களின் கைதுகள் இலங்கை அரசின் ஜனநாயக படுகொலை: கண்டனம் வெளியிட்டுள்ள யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்
கைதுகள் மூலம் அப்பட்டமான ஜனநாயக படுகொலைகளை இலங்கை அரசு நிகழ்த்துவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான பயணத்தின் போது அறவழியில் போராடிய வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி ஜெனிற்ரா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டிப்பதோடு, இது அப்பட்டமான ஜனநாயக உரிமை மீறலாகவே பார்க்கின்றோம்.
அனைத்துலகச் சமூகத்தின் முன்னால் ஜனநாயக உரிமைகள் வழங்கப்படுவதாக ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு, அறவழியில் போராடிய மக்களின் உரிமையினை பொருட்படுத்தாது கைதுகள், விசாரணைகள் மூலமாக அடக்கியொடுக்குவதற்கு முயலும் இந்த அரசின் போக்குகள் உலக அரங்கின் முன்னால் வெட்ட வெளிச்சமாக்கப்பட வேண்டியது தேவை உருவாகியுள்ளது.
இலங்கை அரச படைகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நியாயமானதும் நீதியானதுமான பதிலொன்றைக் கூறுவதற்கு இயலாத அரசு, அவற்றுக்கான பதில் கோிப் போராடும் உறவுகளை இன்று வரையில் வீதியில் விட்டுள்ளதோடு, அவர்களுக்கான பரிகார நீதியையும் மறுத்து வருகின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தங்கள் உறவுகளுக்கு நேர்ந்த அநீதிகளுக்கு பதில் கோரி அறவழியில் போராடுபவர்களை கருத்து சுதந்திரத்தை அடக்கியாளும் செயற்பாடாகவே கைது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக குரல் கொடுத்துவரும் செயற்பாட்டாளர்கள், உறவினர்களை புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட அரச படைகள் அச்சறுத்தும் போக்கும் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன.
இதுபோன்ற ஜனநாயக மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசும் செயல்களில் ஈடுபடாமல், உளச்சுத்தியுடன் நிலையான நல்லிணக்கத்தினை எட்டுவதற்கு முயல வேண்டும்.
தமிழ் மக்களை ஓரவஞ்சனையுடன் வஞ்சித்து விட்டு நல்லிணக்கம் பற்றிய உரையாடல்களை மேற்கொள்வதென்பது 21ஆம் நூற்றாண்டில் நவீன வடிவில் அடிமைத்தனத்தை தமிழ் மக்கள் மீது திணிக்க முயல்வதாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.