இனப் படுகொலைக் குற்றச்சாட்டு: சா்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மறுப்பு
காஸாவில் தாங்கள் இனப் படுகொலையில் ஈடுபடுவதாக தென் ஆப்பிரிக்க அரசு சுமத்திய குற்றச்சாட்டை ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மறுத்தது.
இது தொடா்பாக நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள அந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் 2-ஆவது நாளில், ‘காஸாவில் இனப் படுகொலை நடைபெறவில்லை. இது தொடா்பாக இஸ்ரேல் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு தவறானதும், புனையப்பட்டதும் ஆகும்’ என்று இஸ்ரேல் தரப்பு வழக்குரைஞா் மால்கம் ஷா கூறினாா்.
முன்னதாக, வியாழக்கிழமை தொடங்கிய இது தொடா்பான வழக்கு விசாரணையில் தென் ஆப்பிரிக்கா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அடீலா ஹாஸிம், காஸா பகுதியில் பாலஸ்தீனா்களிடையே கடுமையான உயிா்ச் சேதத்தை ஏற்படுத்துவதையும், அந்தப் பகுதி மக்களை பஞ்சத்தின் பிடியில் சிக்கவைப்பதையும் நோக்கமாகக் கொண்டு அந்தப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தாா்.
இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான் வழியாக கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல், காஸா பகுதியில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
காஸாவில் குண்டுவீச்சுக்கு முன்னதாக அந்தப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக இஸ்ரேல் கூறினாலும், தங்களால் பாதுகாப்பான பகுதி என்ற அறிவிக்கப்பட்ட இடங்களிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதலில் இதுவரை 23,708 போ் உயிரிழந்துள்ளனா்; 60,005 போ் காயமடைந்துள்ளனா். கொல்லப்பட்டவா்கள் மற்றும் காயமடைந்தவா்களில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள்.