Fact Check: அயோத்தி ராமர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பம் 33 கிலோ தங்கம் நன்கொடை அளித்தார்களா!
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி குடும்பம் 33 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்துள்ளதாக சமூக ஊடகத்தில் கவனம் ஈர்த்த தகவலின் உண்மை நிலை வெளியாகியுள்ளது.
மாபெரும் கும்பாபிஷேக விழா
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ராமர் கோவிலின் மாபெரும் கும்பாபிஷேக விழாவானது எதிர்வரும் 22ம் திகதி முன்னெடுக்கப்படுகிறது. இந்த விழாவினை ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளையானது மிக விமரிசையாக முன்னெடுக்க இருக்கிறது.
இதன் பொருட்டு முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உட்பட நாடு முழுவதிலும் இருந்து 3,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே சமூக ஊடகத்தில் கவனத்தை ஈர்த்த தகவல் ஒன்று சலசலப்பை ஏற்படுத்தியது. உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ராமர் கோவிலுக்காக 33 கிலோ எடைகொண்ட 3 தங்க கிரீடங்களை நன்கொடையாக அளித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி குடும்பம் 33 கிலோ தங்கம்
பலர் முகேஷ் அம்பானியின் இந்த செயலை வானலவில் புகழ்ந்து பதிவிட்டுள்ளனர். ஆனால் உண்மையில் அப்படி ஒரு செயல் நடக்கவில்லை என்றே ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி குடும்பம் 33 கிலோ தங்கம் நன்கொடை அளிப்பதாக வாக்குறுதியும் அளிக்கவில்லை என நிர்வாகிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மட்டுமின்றி, ராமர் கோவிலுக்கு நன்கொடை அளித்தவர்கள் அல்லது அளிக்க உறுதி அளித்தவர்கள் பட்டியலிலும் முகேஷ் அம்பானி குடும்பம் இல்லை என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டின் நான்கு சங்கராச்சாரியர்கள் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், கட்டுமான வேலைகள் முழுமையடையாத கோவிலில் கும்பாபிஷேக விழா முன்னெடுப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.