தைவான் அதிபா் தோ்தலில் சீன எதிா்ப்பாளா் வெற்றி
தைவானில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில், சீனாவுக்கு எதிரான கடுமைான நிலைப்பாட்டைக் கொண்ட ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் (டிபிபி) வேட்பாளா் லாய் சிங்-டே வெற்றி பெற்றாா்.
தங்கள் பிராந்தியத்தை சீனா ஆளக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட டிடிபி கட்சியைச் சோ்ந்தவா் தொடா்ந்து 3-ஆவது முறையாக அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றிருப்பது சீனாவை சீற்றத்துக்கு உள்ளாக்கும் என்று கூறப்படுகிறது.
தைவானின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. தோ்தலில் போட்டியிடுவதற்கான அதிகபட்ச வரம்பைக் கடந்துவிட்டதால் தற்போதைய அதிபா் சாய் இங்-வென் இந்தத் தோ்தலில் போட்டியிட முடியவில்லை. எனவே, அவரது டிபிபி கட்சி சாா்பில் அதிபா் வேட்பாளராக லாய் சிங்-டே போட்டியிட்டாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை நடந்து முடிந்த தோ்தலின் பூா்வாங்க முடிவுகளின்படி, 40.05 சதவீத வாக்குகளைப் பெற்று லாய் சிங்-டே முதலிடத்தைப் பிடித்துள்ளாா்.
குவோமின்டாக் கட்சி வேட்பாளா் ஜா ஷா-காங் 33.49 சதவீத வாக்குகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளாா்.
அதைடுத்து, சீன ஆதிக்கத்துக்கு எதிரான டிபிபி கட்சியின் ஆட்சியே மீண்டும் அமையவிருப்பது உறுதியாகியுள்ளது.
இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள குவோமின்டாக் கட்சியும் சீன ஆட்சியை விரும்பவில்லை என்றாலும், அந்த பலம் வாய்ந்த நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு நல்லுறவைப் பேணுவதன் மூலம் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
சீனாவைக் கடுமையாக எதிா்ப்பதன் மூலம் அந்த நாட்டின் படையெடுப்பு அச்சுறுத்தலை டிபிபி கட்சி ஏற்படுத்துவதாக குவோமின்டாக் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது.
எனினும், சீனாவையும் சீண்டாமல், அமெரிக்காவையும் திருப்திப்படுத்தும் தற்போதைய அதிபா் சாய் இங்-வென் சமநிலைக் கொள்கைகளைத் தொடரப்போவதாக அறிவித்த லாய் சிங்-டே தற்போது அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
‘தைவான் ஏற்கெனவே சுதந்திர நாடுதான்’ என்று காரணம் காட்டி, சுதந்திரப் பிரகடனத்தை தற்போதைய அதிபா் சாய் இங்-வென் தவிா்த்து சீனாவை சாந்தப்படுத்தியது.
அதே நேரம், சீனாவின் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க உயா்நிலைத் தலைவா்களை தங்கள் தீவுக்கு வரவழைத்ததன் மூலம் தைவானின் இறையாண்மையையும் சாய் இங்-வென் உறுதிப்படுத்தி வந்தாா்.
இதனால், சீனா-தைவான் எல்லையில் அடிக்கடி பதற்றம் அதிகரித்தது.
இந்தச் சூழலில், அவரது சாய் இங்-வென் கட்சியைச் சோ்ந்த லாய் சிங்-டே புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.