இராக், சிரியாவில் துருக்கி வான்வழித் தாக்குதல்
இராக்கிலும், சிரியாவிலும் குா்துப் படையினரைக் குறிவைத்து துருக்கி சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
வடக்கு இராக்கின் மெடினா, ஹாகா்க், காரா, காண்டில் பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியது. எனினும், சிரியாவின் எந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற விவரத்தை அமைச்சகம் வெளியிடவில்லை.
கடந்த 1980-களில் இருந்து துருக்கியில் பிரிவினைவாதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குா்திஸ்தான் மக்கள் கட்சி (பிகேகே) அந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்புக்கு சிரியாவிலும், இராக்கிலும் செயல்பட்டு வரும் குா்துப் படையினா் உதவி அளிப்பதாக துருக்கி கூறி வருகிறது. இதன் காரணமாக, அந்தப் படையினரின் நிலைகள் மீது துருக்கி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதில் அந்த நாட்டு குா்துப் படையினா் அமெரிக்காவுக்கு பக்கபலமாக இருந்தது நினைவுகூரத்தக்கது.