உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது!
உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பில் அம்பாறையைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியானதாக அறியப்பட்டு குறித்த வினாத்தாள்கள் மும்மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்த மோசடி குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியரை கைது செய்துள்ளது.
சொந்தக் கையெழுத்தில்
52 வயதுடைய இந்த ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளார் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.
இது தவிரவும், 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II ஆம் பகுதி வினாத்தாள்களை தனது வீட்டில் வைத்து அவரது சொந்தக் கையெழுத்தில் எழுதியுள்ளதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இரத்து செய்யப்பட்ட
மேலும், கைது செய்யப்பட்ட ஆசிரியர் விவசாய விஞ்ஞானம் I வினாத்தாள் கேள்விகளை ஜனவரி 8ஆம் திகதியும், விவசாய விஞ்ஞானம் II வினாத்தாள் கேள்விகளை ஜனவரி 10ஆம் திகதியும் வெளியிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இரத்து செய்யப்பட்ட உயர்தரப் பரீட்சையில் விவசாய விஞ்ஞானப்பிரிவின் இரண்டாம் பகுதிக்கான விசேட பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் 11.40 மணி வரை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.