கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட கடன் வழங்கும் நிலையம் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது ஐந்து சீனப் பிரஜைகளையும் ஒரு இலங்கையரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
மேலும், 8 கணினிகள், 13 மடிக்கணினிகள் மற்றும் 49 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்லைன் கடன் வசதி
இணையதளம் மூலம் கடன் வழங்கும் போது, கடனாளியின் கையடக்க தொலைபேசிகளின் தனிப்பட்ட தகவல்களை, OPT எண் மூலம் பெற்று, சமூகத்தில் சில தகவல்களை பரப்பி பணம் வழங்குமாறு மிரட்டியதாக பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகள் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் எனவும், இது தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி புலனாய்வுப் பிரிவினருக்கோ தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
“நம்பத்தகாத நிறுவனங்களுடன் இதுபோன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபடாதீர்கள்” என பொலிஸார் பொது மக்களிடம் குறிப்பிட்டுள்ளனர்.