கண்டி வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த நபர்!
கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த சுகாதார உதவியாளர் ஒருவர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கண்டி தேசிய வைத்தியசாலை பெண் வைத்தியர்கள் உடை மாற்றும் அறையில் நவீன கையடக்க தொலைபேசியை மறைத்து வைத்து நுட்பமான முறையில் காணொளி பதிவு செய்ததாக கண்டி தலைமையக பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சுகாதார உதவியாளர் தொண்டை, காது, மூக்கு அறுவை சிகிச்சை பிரிவில் பணிபுரிபவர் என்றும், கடந்த 12ம் திகதி குறித்த இடத்தில் உடை மாற்றிக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் மிகவும் நுட்பமாக வைக்கப்பட்டிருந்த குறித்த கைப்பேசியை கண்டுபிடித்துள்ள நிலையில் பின்னர் ஏனைய வைத்தியர்களுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ஏனைய வைத்தியர்கள் கண்டி தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்து கைப்பேசியை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த கைப்பேசி காணொளிகளை ஆய்வு செய்ததில், இந்த கைப்பேசியை பயன்படுத்தி நீண்ட காலமாக வைத்தியர்கள் உடை மாற்றுவதை குறித்த நபர் காணொளி பதிவு செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
விசாரணையின் பின்னர், கைப்பேசியை வைத்திருந்த சுகாதாரப் பணியாளரை கைது செய்து கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தலைமையக பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸ் தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் பணிப்புரையின் பேரில் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தேவிந்தி விக்கிரமசிங்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.