ரஷ்ய ஊடுருவலை தடுக்க போர்ப்பயிற்சியை ஆரம்பிக்கும் பிரித்தானியா!
ரஷ்ய ஊடுருவலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை பிரித்தானியா முதலான நாடுகள் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கத்திய நாடுகளை எதிரிகளாகப் பார்க்கும் ரஷ்ய அதிபர் புடின், எந்த நாட்டை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற எண்ணம் மேற்கத்திய நாடுகளுக்கு உருவாகி வருகிறது.
ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்ததிலிருந்தே ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் மற்றும் உதவி செய்யும் மேற்கத்திய நாடுகள் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளார்.
ரஷ்ய ஊடுருவல்
ஆதரவளிக்கும் நாடுகளுக்கு புடினின் ஆதரவாளர்கள் மிரட்டலும் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான நிலையில் ரஷ்யா ஊடுருவினால் அதை எதிர்கொள்ளும் வகையிலும், தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலும், அடுத்த மாதம் நேட்டோ அமைப்பு போர்ப்பயிற்சிகளைத் துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
31 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பு மேற்கொள்ள இருக்கும் போர்ப்பயிற்சிக்காக, பிரித்தானிய ராணுவம் தனது பங்குக்கு 16,000 ராணுவ வீரர்களுடன், கவச வாகனங்கள், கனரக ஆயுதங்கள், ஹெலிகொப்டர்கள் முதலானவற்றை அனுப்ப உள்ளது.
போர்ப்பயிற்சியைத் துவக்கும் பிரித்தானியா
பிரித்தானிய கடற்படையும், 2,000 வீரர்களுடன், 8 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளையும், 400 சிறப்புப்படை கமாண்டோக்களையும் அனுப்ப உள்ளது. விமானப்படை சார்பில், F-35B மின்னல் வேக போர் விமானங்கள், P-8 உளவு விமானங்கள் ஆகியவையும் அனுப்பப்பட உள்ளன.
நேட்டோ அமைப்பிலுள்ள எந்த நாட்டை எதிரிகள் தாக்க முற்பட்டாலும், அதை எதிர்கொள்வதற்கு தயாராவதற்காகவே இந்த போர்ப்பயிற்சி என பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.