நிபா வைரஸுக்கு முதன்முதலில் தடுப்பூசி பரிசோதனையை தொடங்கிய ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள்!
இந்தியா உள்பட பல ஆசிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொடிய நிபா வைரஸுக்கு முதன்முதலில் தடுப்பூசி பரிசோதனையை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), நிபா வைரஸ் கரோனாவை விட ஆபத்தானது. கரோனாவை விட நிபா வைரஸ் பாதிப்பு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2-3 சதவிகிதம் பேர் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 40-70 சதவிதம் பேர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்து வருகின்றனர். மேலும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது.
நிபா வைரஸ் ஒரு பேரழிவு நோயாகும், நிபா பாதிப்பு இறப்பு விகிதம் 40 முதல் 70 சதவிகிதம் வரை உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
சிங்கப்பூர், மலேசியா, வங்காளதேசம் மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் கேரளாவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் பரவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பழம் தின்னும் வௌவால்கள் உடலில் இந்த வைரஸ்கள் உள்ளன. இது நேரடியாக வௌவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடும் என்றும்,
வெளவால்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று எவ்வாறு பரவுகிறது என்பதை உறுதிபடுத்த முடியவில்லை. ஆனால் அதனை கண்டுபிடிப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொற்று பாதிப்பு எப்பொழுதும் மழைக்காலத்தில் தான் நடக்கிறது.
அவசர ஆராய்ச்சி தேவைப்படும் முன்னுரிமை நோயாக உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த வைரஸ், தட்டம்மை போன்ற நன்கு அறியப்பட்ட நோய்க்கிருமிகளான பாராமிக்சோ வைரஸின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிபா வைரஸ் முதலில் பரவிய போதிலும், தற்போது வரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது சிகிச்சைகள் எதுவும் இல்லை.
“நிபா வைரஸ் முதன்முதலில் 1998 இல் கண்டறியப்பட்டது, 25 ஆண்டுகளாக உலக சுகாதார சமூகத்தில் இதுவரை இந்த பேரழிவு நோய்க்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது சிகிச்சைகள் கண்டறியப்படவில்லை,” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆய்வாளரும், தொற்று நோய்களின் பேராசிரியருமான பிரையன் ஆங்கஸ் கூறினார்.
“அதிக இறப்பு விகிதம் மற்றும் நிபா வைரஸ் பரவுதலின் தன்மை காரணமாக, இந்த நோய் முதன்மையான தொற்றுநோயாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் தொற்றுநோய் அறிவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ChdOx1 NipahB தடுப்பூசி சோதனையில் பங்கேற்க ஸ்கிரீனிங் செயல்முறைக்கு உள்பட்ட 18 முதல் 55 வயதுடைய 51 தன்னார்வலர்களுடன் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட முதல் தடுப்பூசி.
இந்த தடுப்பூசி சோதனையானது உள்ளூர் தொற்று பரவலை தடுக்கக்கூடியதில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும், அதே நேரத்தில் எதிர்கால உலகளாவிய தொற்றுநோய்க்கு உலகம் தயாராவதற்கு உதவுகிறது” என்று அங்கஸ் கூறினார்.
தடுப்பூசியின் பாதுகாப்பை மதிப்பிடுவதிலும், இளமை, ஆரோக்கியமான மக்கள்தொகையில் நோய் எதிர்ப்பு மறுமொழிகளை பகுப்பாய்வு செய்வதிலும் இந்த சோதனை கவனம் செலுத்தும்.
“இந்த சோதனையானது கொடிய நிபா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான கருவிகளின் தொகுப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஒரு படியாகும்.
இந்த பரிசோதனை அடுத்த 18 மாதங்களில் இயங்கும், நிபா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் மேலும் சோதனைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.