நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண பொதுஜன பெரமுன ஆயத்தம் : நாமல் உறுதி
சிறிலங்கா தற்போது எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பேச்சுக்களை முன்னெடுக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆயத்தமாக உள்ளதென அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையை அபிவிருத்தி செய்வதற்காக குறித்த கட்சிகளுடன் இணைந்து தீர்மானங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக இன்று(17) கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் 45 ஆண்டு கால அரசியல் பயணத்தில் அவருக்கு எதிராக இருந்த ஒரே நபர், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க.
அரசியல் பயணம்
இலங்கைக்காக அவருடன் இணைந்து எம்மால் அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியுமானால் ஏனைய அரசியல்வாதிகளுடனும் இணைந்து எம்மால் அரசியல் செய்ய முடியும்.
இந்த விடயத்தில் வேறு தரப்பினருடன் நாம் பகைத்துக் கொள்ள முடியாது, இது தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ரணில் விக்ரமசிங்கவின் கட்சி மாத்திரமின்றி அனைத்து தரப்பினருடனும் நாம் பேச்சுக்களை முன்னெடுக்க ஆயத்தமாக இருக்கிறோம்.