கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்! கல்வீச்சில் ஈடுபட்ட மாணவர்கள்: ஊடகவியலாளரை தாக்கிய காவல்துறையினர்
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களை காப்பற்ற ஒன்றுபடுங்கள் எனும் தொனிப்பொருளில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டகாரர்கள் முன் வைத்த கோரிக்கை
கொழும்பு ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றதோடு, காவல்துறையினர், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதன் போது, பேராசியர் பற்றாக்குறைக்கு தீர்வு,வரிகளை நீக்கு, உண்ண குடிக்க இல்லை, மக்கள் துன்பத்தில் போன்ற பல பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், இந்த ஆர்ப்பாட்டத்தை செய்தியாக்கும் ஊடகவியாளாலர்கள் மீதும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்களை மேற்கொண்ட நிலையில், எமது ஊடகவியாலளரும் தாக்கப்பட்டுள்ளார்.