செங்கடலில் ஹவுதி அமைப்பினருக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா
ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் முகாம் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பல்களை தாக்க ஹவுதி வைத்துள்ள 4 ஏவுகணை அமைப்புகளை அழிப்பதற்கு குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
செங்கடல் பகுதியில் அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி ஏவுகணை வீசித்தாக்கியதைத் தொடர்ந்து இந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதேவேளை ஈரானில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்களின் படங்களை அமெரிக்க இராணுவம் இணையத்தில் பகிர்ந்துள்ளது. அந்த ஆயுதங்கள் ஒரு படகிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பொருளாதார சிக்கல்
ஈரானிலிருந்து அவை ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டதாகச் தெரிவிக்கப்படுகிறது.
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. இதனால் பெரும்பாலன வணிக கப்பல்களின் போக்குவரத்து இடைநடுவில் நிறுத்தப்படுகின்றன.
அண்மையில் இந்த ஹவுதி அமைப்பினரின் விவகாரத்திற்கு ஒரு முடிவு கொண்டு வரப்படாவிட்டால் இறக்குமதி நாடுகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.